உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டித்து மசோதா நிறைவேற்றம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை : ஜூன்-28

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனால், தனி அதிகாரிகள் பதவிக்காலம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மருத்துவ இடங்களில் அண்டை மாநில மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து சேருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக மருத்துவ இடங்களில் அண்டை மாநில மாணவர்கள் இடம்பெறாத வகையில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், பிரச்சனையை தமிழக அரசு கவனத்தோடு கையாண்டு வருவதாகவும் கூறினார். இருப்பிடச் சான்றிதழ் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக தெரிவித்த விஜயபாஸ்கர், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிரான தமிழக சட்டப்பேரவை மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன், புதுக்கோட்டை புறநகர் பகுதிகளில் சிற்றுந்துகளை  இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் சிற்றுந்து இயக்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் அரசிடம் இல்லை எனவும் கூறினார். மற்ற மாவட்டங்களில் சிற்றுந்து இயக்க அரசு கொள்கை முடிவு எடுத்தால், திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சேலம் மாநகரம் வேகமாக வளர்ச்சியடைந்து  வருவதால், இட நெருக்கடி அதிகமாக உள்ளது என்றும் எனவே உடையார்பட்டியில் புதிய பஸ்  நிலையம் அமைத்து தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அரசு புதிய  பஸ் நிலையம் அமைக்க முன் வந்தாலும் அதற்கான நிலம் கையகப்படுத்துவதுதான்  பெரும் பிரச்னையாக உள்ளது என்று கூறினார். கோவை, சேலம், மதுரை ஆகிய 3 மாநகரங்களில் பஸ்  போர்ட் அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், பத்மநாபபுரம் தொகுதி முக்கிய சுற்றுலா  தலமாக விளங்குவதாக தெரிவித்தார். எனவே உதயகிரிகோட்டை, பேச்சுபாறை அணை,  தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, திருபரப்பு அருவி உள்ளிட்ட சுற்றுலா  பகுதிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்தையும்  ஒருங்கிணைத்து கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் மூலம் இதற்கான திட்ட அறிக்கை பெற்று, செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Posts