ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி, புதுவை அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி, புதுவை அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

        புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அனைத்து தொழிற்சங்கத்தினரும், நேற்று மாலை, துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த அனைத்து தொழிற்சங்கத்தினர், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. நகரம், கிராம பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மட்டுமின்றி, வெளியூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி நிலுவைத் தொகை குறித்து உறுதி அளிக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால், இன்றும் வேலை நிறுத்தப் பேராட்டம் தொடர்கிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts