எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை : கர்ப்பிணி பெண் புகார்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணியை சோதித்த மருத்துவர்கள், ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, ரத்த வங்கியில் வாங்கி ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் தொற்று இருந்ததும், அது கர்ப்பிணி உடலில் பரவியதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில், ரத்த வங்கி ஊழியர்கள் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும், சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் பேட்டியளித்த கர்ப்பிணி பெண், சிறுவயதில் இருந்தே  ஊசி போட்டது கூட கிடையாது எனவும், மற்றவர்கள் தன்னை ஒதுக்கிவைப்பது போல் தோன்றுவதாகவும் கூறினார். மற்றவர் ரத்தம் ஏற்றப்பட்டதன் மூலம் இந்த நோய் தனக்கு ஏற்பட்டுள்ளது எனவும், இந்த பாதிப்புக்கு உள்ளாக்கியதற்கு பதில், தன்னை கொலை செய்து இருக்கலாம் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related Posts