எச்.ராஜாவை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும்

தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்குக் காரணமானவரும், தமிழ்ச் சமுகத்தின் பொது விரோதியுமான எச்.ராஜாவை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

       இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உபகண்டத்துக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய அறிவாசான் பெரியாரின்  சிலையை உடைக்க வேண்டும் என மமதையோடும், திமிரோடும் பேசிய எச்.ராஜாவை கைது செய்யாமல், தமிழக காவல்துறை மத்திய அரசுக்கு கொத்தடிமை வேலை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

       திருப்பத்தூரிலும், சென்னையிலும், தாராபுரத்திலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செய்தி தமிழக மக்கள் மனதில் ரண வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

       இந்நிலையில், திருச்சி சோமரசம்பேட்டையில் நேற்றிரவு பெரியார் சிலையின் கைத்தடி உடைக்கப்பட்ட செய்தியும், ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு என்னும் ஊரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செய்தியும் நெஞ்சில் ஈட்டியாய் பாய்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

       மேடையில் பொது அமைதிக்கு விரோதமாகப் பேசினார் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாசை கைது செய்த தமிழக காவல்துறை எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

        நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கீழ்த்தரமான சொற்களால் இழிவுபடுத்திப் பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள வைகோ,  நாள்தோறும் காவல்துறை பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளில் அந்த மனிதர் கலந்துகொள்கிறார் என்றால் இதைவிட தமிழக காவல்துறைக்கு அவமானம் வேறொன்றும் இருக்க முடியாது என்று சாடியுள்ளார்.

       பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி எச்.ராஜாதான் எனும் நிலையில், அவரை தமிழக காவல்துறை கைது செய்து தன் கடமையை ஆற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

       இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள  அறிக்கை, தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

       தொடர்ந்து தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேலும் திராவிடர் கழகம் பொறுமை காப்பது அர்த்தமற்றதாகி விடும் எனவும், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தா விட்டால், அடுத்த கட்ட பணியில் அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் உரிய வகையில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் எனவும் கி. வீரமணி அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளார்.

Related Posts