எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும்

நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

      விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மெய்யபுரம் என்ற ஊரில் விநாயகர் சிலை அமைத்திருந்தனர். அந்த சிலையை நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலையில் கரைப்பதற்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை திருமயம் தாலுகா பா.ஜ.க.வினர் அழைத்திருந்தனர். இதையொட்டி மெய்யபுரம் அருகே ஒரு இடத்தில் மேடை அமைக்க இந்து அமைப்பினர் போலீசாரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கவே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசார் மற்றும் நீதிமன்றத்தை அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வழுத்து வருகிறது.

      நேற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் எச்.ராஜா பதிலளிக்க உத்தரவிட்டது.

      இந்நிலையில், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை நீதிமன்றமே முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தை அணுகுமாறும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts