எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் : கைவோ

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கைவோ கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் முறையே தி.மு.க. மற்றும் காங்கிரஸ்கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழு அளவில் களத்தில் பணியாற்றும் என்று அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசின் துரோகங்களுக்கு துணையாகச் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இடைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் நுழைவுத் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணை போவதை மறந்துவிட முடியாது என்று வைகோ கூறியுள்ளார். விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைப்பது, சேலம் – சென்னை எட்டுவழி பசுமைச் சாலை ஆகியவற்றை எதிர்த்து போராடுவோரை காவல்துறையின் அடக்குமுறையை ஏவி எடப்பாடி அரசு ஒடுக்கி வருகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். புதிய கல்விக்கொள்கை, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, தமிழக அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் போன்ற மக்களுக்கு எதிராகன திட்டங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லியின் காலடியில் அடகுவைத்துவிட்டு, அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற கொந்தளிப்பு தமிழக மக்கள் உள்ளத்தில் எப்போதோ எழுந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் மக்கள் விரோத அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வாக்காளப் பெருமக்கள் காத்திருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மறுமலர்ச்சி தி.மு.கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், புதுவை மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. புதுவை மாநில நிர்வாகிகள், கழகக் கண்மணிகள் களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts