எடியூரப்பா இன்று மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு – ஆட்சியமைக்க அவகாசம் கேட்டார்

கர்நாடகா ஆளுநரை சந்தித்த பாஜக சட்டமன்றக் குழு தலைவர் எடியூரப்பா, தம்மை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று மீண்டும் உரிமை கோரினார். அதேநேரத்தில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் மாயமானதால் பரபரப்பு உருவாகியுள்ளது.

கர்நாடகா : மே-16

கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், 104 தொகுதிகளை வென்ற பாஜக ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவை தடுக்க காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. இதனால், யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்பது குறித்து ஆளுநர் வாஜுபாய் வாலா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பெங்களூருவில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பா, ஆளுநர் வாஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு மீண்டும் உரிமைக் கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தமக்கு அவகாசம் கொடுத்தால், பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று தெரிவித்தார்.

இதனிடையே, பெங்களூருவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 37 எம்எல்ஏக்களில், 2 பேரை தவிர 35 பேர் கலந்து கொண்டனர். 2 பேர் பற்றிய விவரங்கள் தெரியாததால், குமாரசாமி கலக்கமடைந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தேர்தல் முடிவு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும், மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது என்றும் கூறினார். மேலும், தங்களது கட்சி எம்எல்ஏக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் 14 பேர் மாயமாகியுள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது. எம்எல்ஏக்களை விலைபேசி, அவர்களை பாஜக கடத்திச் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

Related Posts