எட்டுவழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்கப் போவதில்லை – எடப்பாடி பழனிச்சாமி

எட்டுவழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்கப் போவதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  சேலத்தில் இந்தாண்டு முதலே சட்டக்கல்லுாரி செயல்படத் தொடங்கும் என்றும்  தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்றும் தெரிவித்தார்.8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகள் நிச்சயம் நஷ்டமடைய மாட்டார்கள்  என்ற முதல்வர், நிலம் கொடுப்பவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்ட பிறகேநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சேலம் – சென்னை 8 வழி விரைவுச்சாலைக்கு ஆதரவு தெரிவித்து, 70 விவசாயிகள் நிலத்தை மனமுவந்து கொடுப்பதாக மனு அளித்துள்ளதாகவும், கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை விவசாயிகள் பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உபரியாக கடலில் கலக்கும் நீரையே சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், இதனால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஒரு சொட்டு நீராக இருந்தாலும் முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர்,  கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் சாத்தியமானால் காவரி ஆற்றின் இரு கரைகளை தாண்டி இருபுறமும் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாயிகள் பயன் அடைவர் என்று குறிப்பிட்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் கதவணை அமைத்து உபரி நீர் தேக்கி வைக்கப்படும் என்றும்  கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியில் ஒன்றரை டிஎம்சி நீரை தேக்கும் வகையில் கதவணை கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கேரளம் மற்றும் குடகு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர் பெறுவதில் சிக்கல் ஏற்படாது என்றும்  போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்த உடன் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Related Posts