எதிர் வரும் மக்களவை தேர்தல் வரை பாஜக தலைவராக அமித்ஷா நீடிப்பார்

எதிர் வரும் மக்களவை தேர்தல் வரை பாஜக தலைவராக அமித்ஷா நீடிப்பார் என அக்கட்சியின் பொதுக்குழு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. தலைவராக இருந்த நிதின் கட்கரி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றதால் பாஜக தலைவர் பதவியில் அமித் ஷா நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதேபோல் அக்கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், இன்று டெல்லியில் கூடிய பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், வரும் மக்களவை தேர்தல் வரை அமித் ஷாவின் பதவி காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக,  டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமித் ஷா, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தார். உயர்சாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுவதாக சிலர் குறிப்பிடும் நிலையில் நாளை வரை நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரதமர் மோடி நாளை நிறைவு உரையாற்றும் போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.

Related Posts