எந்தமொழியில் தேடினாலும் அதன் முடிவுகள் இந்தியில் காட்டப்படுவதால் கூகுள் நிறுவனமே தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது

கூகுளுக்கு சொந்தமான குரோம் பிரௌசரிலோ ஆண்டிராய்டிலோ ஆங்கில வார்த்தைகளைத் தேடும்போது அதற்கான விளக்கம் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தேடல் திரையின் மற்றொரு உட்பக்கத்தில் இந்தியிலும் காட்டப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் கூகுளை தமிழ் மொழியில் பயன்படுத்தினாலும், ஆங்கிலத்தில் தேடப்படும் வார்த்தைக்கான விளக்கம் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தேவையில்லாமல் இந்தியிலும் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தேடல் முடிவுகள் இந்தியில் காட்டப்படுவதில் விருப்பமில்லை என்றால் அதை நிராகரிக்கவோ அதற்குப் பதிலாக தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கவோ கூகுள் பயனாளர்களுக்கு எந்தவொரு ஆப்சனும் இல்லை.

ஆனால் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் இந்தியாவில் அதிகமாகப் புழக்கத்தில் இந்தி மொழியில் தேடல் முடிவுகளை வழங்குகிறோம் என்றும் இது விரைவில் தமிழ் உள்ளிட்ட மற்ற பிராந்திய மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுமெனவும் கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வார்த்தைகளை தட்டச்சு செய்யும் போதே உடனுக்குடன் தேடல் முடிவுகளை வழங்கும் ஒன்பாக்ஸ் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய சேவை இந்தி மொழியில் மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளது. மற்ற மொழிகளை விட செறிவு மிகுந்ததாக இருப்பதால் முதலில் இந்த சேவையை இந்தி மொழியில் சோதனை செய்கிறோமென கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது

இந்தி மொழி செறிவு மிகுந்தது என்றால் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் செறிவு இல்லாதவைகளா என்று தமிழ் ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள். கூகுள் டூடிலில் முத்துலட்சுமி ரெட்டி போன்ற தமிழர்களை கௌரவப்படுத்திய கூகுள் நிறுவனம், இந்த இந்தித் திணிப்பு குற்றச்சாட்டுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கையை எடுக்குமென்று தமிழ் மொழி ஆர்வலர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்

Related Posts