எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 7 இலட்சம் பேர் பங்கேற்பு

         சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

      சென்னை மாநகரின் முன்னாள் மேயர் என். சிவராஜின் 127-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டதையொட்டி, சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில்  அமைச்சர்கள் ஜெயக்குமார் பெஞ்சமின், சரோஜா, கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று கமல்ஹாசன் கூறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், கலை உலகில் எம்ஜியாரோடு யாரெல்லாம் நெருங்கி பழகினார்களோ அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று கமல்ஹாசன் கூறுவதை நிச்சயமாக  மறுப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,இது அரசு விழா என்பதால் கட்சி சார்பாக எல்லோரையும் அழைக்க முடியாது என்றார். தொல்.திருமாவளவன் கூட விழாவுக்கு அழைத்தால் வருவேன் என்று கூறியது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், நிச்சயமாக இது நல்ல விசயம் எனவும்,. திருமாவளவன் தங்கள் பக்கம் நெருங்கி வருவதை காட்டுவதாகவும் கூறினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பதால், அரசு முடிவு செய்து அழைப்பிதழ் அனுப்புகிறது எனவும், அரசு முடிவு செய்கிற பட்சத்தில், திருமாவளவன் உட்பட  எல்லோருக்குமே அழைப்பிதழ் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் அனுமதியின்றி அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், பேனர்கள் அனைத்தும் அனுமதி பெற்றுதான் வைக்கப்பட்டுள்ளது எனவும், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து தகவல் கிடைத்தால் அதை அகற்ற தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து சிவராஜின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,. எம்ஜிஆர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் என்பதால், அவரது விழாவில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டியதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிற மாதிரி, கட்சி ரீதியாக எதுவும் இல்லை எனவும் கூறினார். தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால் அதை எதிர்த்து மக்கள் போராட நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

சிவராஜின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கசாலையில் மேம்பால கட்டுமான பணிக்காக தற்காலிகமாக இடம் மாற்றப்பட்ட சிவராஜ் சிலையை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என கூறினார்., இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை மேம்பால பணிக்காக வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த சிலையையும் ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Posts