எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

சென்னையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், அதற்கான நீதிபதி பதவியேற்கும் நாளில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts