எருமப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்து : 5 பேர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த சரவணன், கேசவன், கந்தம்மாள், வசந்தி ஆகியோர் ஒரு வயது குழந்தை பிர்ஜின் உடன், காரில் கோவிலுக்குச் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.  காரை கபிலர் மலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்தநிலையில் கார்  எருமப்பட்டி அருகே வந்த போது,  முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் கார் முழுவதும் உருக்குலைந்து போனதில்  குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமுற்ற வசந்தி என்ற பெண் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்திற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts