ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூன் 5 ஆம் தேதி வரை கைது செய்ய தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூன் ஐந்தாம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லி : மே-30

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்குவதற்கு வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சி வாரியம் ஒப்புதல் அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் விதிகளை மீறி ஒப்புதல் அளித்ததாகவும், இதற்குக் கைம்மாறாகச் சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு ஏர்செல் டெலிவெஞ்சர்ஸ் 26 லட்ச ரூபாய் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாகக் கார்த்தியை சிபிஐ ஏற்கெனவே பிப்ரவரி மாதம் கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணையை விரைவுபடுத்தி வரும் நிலையில், ப.சிதம்பரம் இன்று முன்ஜாமீன்கோரி டெல்லி பட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் ஐந்தாம் தேதிக்குள் அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்றும், இந்த மனுவுக்கு ஜூன் ஐந்தாம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஜூன் 5 வரை ப.சிதம்பரத்தைக் கைது செய்யவும் நீதிபதி தடை விதித்தார்.

Related Posts