ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

            திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு காரில் திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த முதல்வர், இரவு 7.30 மணியளவில்  தனது குடும்பத்தினருடன் திருமலையில் உள்ள வராகசாமி கோவில் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். இதேபோல், சாமி தரிசனம் செய்ய நேற்றிரவு திருப்பதிக்கு வந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, வெங்கையா நாயுடுவை சந்தித்து பொன்னாடை போர்த்தினார். அப்போது இருவரும் சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

            இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் நடந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் ரங்கநாயக மண்டபத்தில் முதல்வருக்கு தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி தேவஸ்தான அதிகாரிகள் கவுரவித்தனர்.  இதனை தொடர்ந்து ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சாமி கோவில் அருகே தேங்காய் உடைத்து பின்னர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து முதல்வர் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாக கூறினார்

            இதேபோல், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று காலை குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு,  குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்ததாகக் கூறினார். முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனத்திற்கு திருப்பதிக்கு வர வேண்டும் எனவும், இதன் மூலம் மற்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழக முதல்வருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த வெங்கையா நாயுடு,  தமிழக முதல்வருடனான சந்திப்பின்போது எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும்,  இருவரும் சாமி தரிசனத்திற்காக வந்ததாகவும் கூறினார்.

Related Posts