ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம்

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோரும் மலத் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது எனவும், ஆகவே, அமைச்சரவை எடுத்த முடிவின்படி ஆளுநர் நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புவதாகவும் கூறினார்.

சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் புகார் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில் முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம் எனவும், சிறையின் உள்ளே கலைகள் வரைய படிக்கும் கைதிகள் சிறை அதிகாரிகள் அனுமதியுடன் இதுபோல வரைந்து கொள்வதாகவும் அவர் கூறினார். சில அதிகாரிகள் உதவியுடன் செல்போன்கள் மட்டும் சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர்சி.வி சண்முகம் தெரிவித்தார்

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,நீதிமன்றம் மற்றும் காவல்துறையை விமர்சித்த விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Posts