ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு

ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த, 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவித்திருப்பது சட்டவிரோதம் என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Posts