ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு 6 வாரம் தடை விதித்து உயர்நீதிமன்றம் ஆணை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு 6 வாரம் தடை விதித்து உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

சர்கார் படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே இக்காட்சிகள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாக தேவராஜன் என்பவர் மாநகர காவல் ஆணையரகத்தில் புகாரளித்திருந்தார்.

இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. பின் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து சுதந்திரமிருந்தும், எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, தணிக்கை பெற்ற படத்துக்கு வழக்குப் பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும் என்றும், அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர்.

பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எஃப்.ஐ.ஆரில் மறு உத்தரவு வரும் வரை 6 வாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனக்கூறி ஆணை பிறப்பித்தனர்.

Related Posts