ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெற்றது. அந்த நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கெளர், கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார். அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு சிதம்பரம் தரப்பு விடுத்த கோரிக்கையினை அடுத்து, இந்த வழக்கானது புதன் கிழமை காலை விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Posts