ஐதராபாத்தில் கர்நாடக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம்  எம்.எல்.ஏ.க்கள்

கர்நாடகாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம்  எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா : மே-18

கர்நாடகத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், நேற்று எடியூரப்பா அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவியேற்ற உடன் காவல்துறையில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். குறிப்பாக காவல்துறையில் உள்ள உயரதிகாரிகளை இடமாற்றம் செய்தும் எடியூரப்பா உத்தரவிட்டார். இதனால், குதிரை பேரத்தை தவிர்க்க மைசூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது. கர்நாடகாவில் தங்கள் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பில்லை என்று உணர்ந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள், அவர்களை வேறு மாநிலங்களுக்கு மாற்ற முடிவு செய்தனர். இதையடுத்து, காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் பகிரங்கமாக அறிவித்தனர். இதனால் எம்.எல்.ஏக்களை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப கட்சி தலைமை முடிவெடுத்தது. முதலில் சிறப்பு விமானம் மூலமாக அனைவரும்  கொச்சி மற்றும் ஆந்திரா செல்ல திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில், அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மார்க்கமாக பேருந்து மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலில் ஐதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து,  மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களும் அங்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts