ஐபிஎல் கிரிக்கெட்: இன்று சென்னை – பெங்களூரு, டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதல்

 

 

ஐ.பி.எல். போட்டியில் இன்று புனேயில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், புனேயில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.  காய்ச்சல் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் விளையாடாத டி வில்லியர்ஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாடவுள்ளார். இத்தகவலை ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.புள்ளிகள் பட்டியலில் சென்னை 2-ம் இடத்திலும் பெங்களூர் 6-ம் இடத்திலும் உள்ளன. பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு முன்னேறும். சென்னை அணி வெற்றி பெறுகிற பட்சத்தில் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறும்.

ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.ஐதராபாத் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. ஐதராபாத் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதுவும் குறைந்த ஸ்கோர் எடுத்து திறமையான பந்துவீச்சால் வெற்றி பெற்றது. அந்த அணி மும்பை, ராஜஸ்தான் அணிகளை தலா 2 முறையும், பஞ்சாப், கொல்கத்தா அணிகளை தலா 1 முறையும் வென்று இருந்தது. பஞ்சாப், சென்னை அணிகளிடம் தோற்று இருந்தது. டெல்லியை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது. டெல்லி அணி தொடர்ந்து வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஐதராபாத்தின் தொடர் வெற்றிக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Posts