ஐபிஎல் வீரர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் எச்சரிக்கை

 

 

சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவர் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளுக்காக சென்னையில் தங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லும்போது அசம்பாவிதம் நேரிட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல எனவும், வேல்முருகன் எச்சரித்துள்ளார். 

சென்னை, ஏப்ரல்-09

சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது ;-

“காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவே சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. அபிஎல் போட்டி செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெறக்கூடாது. அதனை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

இல்லையென்றால், போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம். தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவர். சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.இதனையும் மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்துவோம்”

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்ட வேல்முருகன் அடையாளமாக சேப்பாக்கம் மைதானம் முன்பு கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார்.

Related Posts