ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  பெங்களூரு அணி போட்டியை விட்டு வெளியேற்றம்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக  குறுக்கிட்ட மழையால் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் களம் இறங்கினர். வருண் ஆரோன் வீசிய தொடக்க ஓவரில் முதல் இரு பந்துகளை கோலி சிக்சருக்கு பறக்கவிட, அதே ஓவரில் டிவில்லியர்ஸ் 2 பவுண்டரி ஓடவிட்டார். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய அடுத்த ஓவரில் சிக்சர், பவுண்டரி விரட்டிய விராட் கோலி 25 ரன் எடுத்த ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த பந்தில் 10 ரன் எடுத்திருந்த டிவில்லியர்சும் ஸ்டோனிஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.   பின்னர் வந்த வீரர்களும் முடிந்த வரை வேகம் காட்ட முயற்சித்தாலும் அதே வேகத்தில் விக்கெட்டுகளும் சரிந்தன.  இதனால் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளும், ஒஷானே தாமஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 3 புள்ளி 2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த போது மறுபடியும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் இந்த ஆட்டத்தை அத்துடன் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணிக்கு நூலிழையில் ஒட்டிக்கொண்டு இருந்த அடுத்த சுற்று வாய்ப்பு முற்றிலும் முடிந்து போனது. தொடர்ந்து 3-வது ஆண்டாக விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு வெகுவாக குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts