ஒடிசாவில் புரட்டிப்போட்ட பானி புயலால் 8 பேர் உயிரிழந்த்தனர். 160 பேர் படுகாயம் 

ஒடிஸாவில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையுடன் பானி புயல் நேற்று கரையைக் கடந்தது. புயல் தொடர்பான சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். 160 பேர் காயம் அடைந்தனர். ஒடிஸாவின் புரி, தலைநகர் புவனேசுவரம் ஆகிய நகரங்களும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.  இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் வீசிய பகுதிகள் பலத்த சேதத்துக்குள்ளாயின. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் பெயர்ந்து வீசப்பட்டன.
மின் கம்பங்களும் சாலைகளில் சரிந்து விழுந்தன. வீடுகள், அலுவலக கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. கண்ணாடியால் அமைக்கப்பட்டிருந்த கதவு, ஜன்னல்கள் உடைந்து சிதறின. செல்லிடப்பேசி கோபுரங்கள் சேதமடைந்ததால் தகவல் தொடர்பு தடைபட்டது.
புரியில் மரம் விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நயாகர் பகுதியில் கட்டடம் இடிந்ததில் பெண் ஒருவர் பலியானார். கேந்திரபாரா மாவட்டத்தில் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் புயலின்போது ஏற்பட்ட அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். புயல் பாதிப்பால் பல்வேறு கிராமப் பகுதிகளில் மேலும் 5 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புயல் காரணமாக தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையமும் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது. அங்குள்ள ஏராளமான உபகரணங்கள் புயலில் சிக்கி சேதமடைந்ததாக விமான நிலைய ஆணையம் கூறியுள்ளது.

இந்த சேதம் காரணமாக அங்கிருந்து விமான இயக்கங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதனால் புவனேஸ்வருக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Related Posts