ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி

        நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றார். இணையதள ஒப்பந்தப்புள்ளியில் எப்படி முறைகேடு நடைபெறும் என கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே யார் ரத்த உறவினர்கள், யார் நெருங்கிய உறவினர்கள் என்பது விளக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். உலக வங்கி நடைமுறையின்படிதான் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது எனவும்,. இதில், அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் அவதூறு பரப்புவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்  அதற்கு மக்களும் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது எனவும்,  அவர்களுக்கு மட்டும் அரசு 14 ஆயிரத்து,719 கோடி ரூபாய் செலவழிக்கிறது எனவும், அகவிலைப்படிக்காக ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். சபரிமலை தொடர்பான கேள்விக்கு கருத்து தெரிவிக்க முதல் அமைச்சர் மறுத்துவிட்டார்.

Related Posts