ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை: ஓ.பி. ராவத்

 மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

      மகாராஷ்டிர மாநிலம், ஒளரங்காபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்களவைக்கும்,சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் ஓராண்டாவது தேவைப்படும் எனவும் கூறினார். எனவே,ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமே இல்லை என்று அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை நடத்த தேவையான முன் தயாரிப்புப் பணிகளை 14மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும், 0 புள்ளி 5சதவீதம் முதல் 0புள்ளி6 சதவீதம் என்ற அளவில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்படுவதாகவும்,யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற விருப்பத் தேர்வை தேர்தல்களில் 1புள்ளி2 சதவீதம் முதல் 1புள்ளி4சதவீதம் வரை வாக்காளர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை 100 சதவீதம் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்தார். மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சிரோமணி அகாலிதளம்,அதிமுக, சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதை ஆதரிக்கின்றன. அதேநேரத்தில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, தெலுங்கு தேசம்,இடதுசாரிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts