ஒரே வழிதடத்தில் எதிர்-எதிர் திசையில் இரண்டு பயணிகள் ரயில்:   மூன்று பேர் பணியிடை நீக்கம் 

மதுரை அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் நேற்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார்  மதுரையில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் ரயிலை அந்த தடத்தில் அனுமதித்துள்ளார். அத்துடன் சிக்னல் கோளாறு இருப்பதாகவும் எனவே மதுரை – நெல்லை பயணிகள் ரயிலை தான் அனுப்பி வைத்துள்ளதால் அதே தடத்தில் வேறு ரயிலை அனுப்ப வேண்டாம் என்று கள்ளிக்குடிய நிலைய அதிகாரி சிவசிங் மீனாவிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். ஆனால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிவசிங் மீனாவிற்கு அதிகாரி ஜெயக்குமார் தமிழில் கூறியது முழுமையாக புரியவில்லை. மேலும் அந்த சமயத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையம் வந்துள்ளது. அந்த ரயிலை அனுப்புமாறு திருமங்கலம் அதிகாரி ஜெயக்குமார் கூறியதாக நினைத்து மதுரை – நெல்லை ரயில் வந்து கொண்டிருந்த தடத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ரயிலை அனுமதித்துள்ளார்.ஆனால் சிவசிங் மீனாவிடம் செல்போனில் பேசிய போது அவர் தவறாக எதையாவது அர்த்தம் கொண்டிருககலாம் என்று நினைத்த திருமங்கலம் நிலைய அதிகாரி ஜெயக்குமார் கள்ளிக்குடி கேட் கீப்பரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது சற்று முன்பு தான் செங்கோட்டை பயணிகள் ரயில் மதுரை நோக்கி புறப்பட்டதாக அந்த கேட் கீப்பர்கூறியதை கேட்டு அதிர்ந்து போன ஜெயக்குமார் உடனடியாக திருப்பரங்குன்றம் ரயில் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு இரண்டு ரயில்களையும் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் இரண்டு ரயில்களும் ஒரே தடத்தில் எதிர் எதிரே நிறுத்தப்பட்டன. .இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அலட்சியமாக செயல்பட்டதற்காக கள்ளிக்குடி ரயில் நிலைய அதிகாரி சிவசிங் மீனா, திருமங்கலம் ரயில்வே நிலைய அதிகாரி ஜெயக்குமார், திருமங்கலம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts