ஓசூரில் 2 காட்டுயானைகளை பிடிக்க கும்கி யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் 2 காட்டுயானைகளை பிடிக்க கும்கி யானைகள் அழைத்து செல்லப்பட்டுள்ளன.

ஓசூர் சுற்றுவட்டாரங்களான கெலவரப்பள்ளி அணைப்பகுதி, பாகலூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் கொம்பன், மார்க் என அழைக்கப்படும் இரண்டு காட்டுயானைகள் பொதுமக்களை அச்சுறுத்துவதோடு விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இவற்றில் கொம்பன் என அழைக்கப்படும் காட்டுயானை மனிதர்களையும் தாக்கக்கூடியது. இந்தயானைகளை பிடிக்க பரணி, மாரியப்பன் என்ற இரு கும்கி யானைகள் கடந்த வாரமே ஓசூர் வனக்கோட்டத்துக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில் ஓசூர் வனக் கோட்ட அலுவலகத்தில் இருந்து இன்று கதிரேப்பள்ளி என்னுமிடத்துக்கு கும்கி யானைகள் அழைத்து செல்லப்பட்டுள்ளன. மயக்க ஊசி செலுத்த 2 பேர் கொண்ட மருத்துவக்குழுவும், யானைகளை பிடிக்க ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி ஆகிய வனக்கோட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். வனத்துக்குள் காட்டு யானைகள் இருக்கும் இடத்தை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது.

Related Posts