கச்சா எண்ணெய் இறக்குமதி : இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்

டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் வகையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ஹூஸ்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் அவரை வரவேற்றனர். பின்னர் ஹூஸ்டன் நகரில் உள்ள ஹோட்டல் போஸ்ட் ஓக்கில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் 16 நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா – ஹூஸ்டனுக்கு இடையே 4.3 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் ஈரான், ஈராக்கை காட்டிலும் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, டெக்சாஸில் இன்று நடைபெறும் ‘ஹவ்டி’ மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி உரை ஆற்றுகிறார். இந்த  நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார். 23-ம் தேதி, ஐநா பொதுச்சபை கூட்டத்தில், பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பின்னர் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து இந்தியாவின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்  விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.

Related Posts