கஜா புயல் பாதிப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வைகோ, கணேசமூர்த்தி தலைமையில் குழுக்களின் சுற்றுப்பயணம்

இது  குறித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத கொடூரமான நாசத்தை சோழ வளநாட்டில் காவிரி தீரத்தில் கஜா புயல் ஏற்படுத்தி விட்டது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், இராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் பெரும் அழிவுக்கு ஆளாகியுள்ளன. 57 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கில் ஆடு மாடுகள் மாண்டு போயின. இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்தன. இலட்சக்கணக்கான வாழை மரங்கள், பல்லாயிரம் ஏக்கர் கரும்புத் தோட்டங்கள், முருங்கை மரங்கள் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் இயற்கையின் கோரத் தாண்டவத்தால் நிர்மூலமாகி விட்டன.

தென்னை மரங்கள் அழிந்ததால் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழன்குடிகாடு ஊரைச் சேர்ந்த விவாயி சுந்தர்ராஜ் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தன்னை மாய்த்துக் கொண்டார். ஒரத்தநாடு அருகில் உள்ள கீழ வன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி தனது நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் அழிந்ததால் மனமுடைந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் மெச்சத் தகுந்தன. அரசு நிர்வாகத்தில் தமிழக அதிகாரிகள் போல இந்தியாவில் எவரும் இல்லை என்று கடந்த காலத்தில் கிடைத்த பெருமையை இப்போது மீண்டும் தமிழக அரசின் அதிகாரிகள் நிலைநாட்டி விட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், காவல்துறையினர், குறிப்பாக மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், மருத்துவத்துறை டாக்டர்கள், தாதியர்கள் பசிநோக்காது கண்துஞ்சாது ஆற்றியுள்ள பணிகள் மனிதநேயப் பணிகள் ஆகும். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழக அரசின் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவதில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், கஜா புயல் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளுக்கு அடுத்த 12 மணி நேரத்திற்குள் தஞ்சைக்குச் சென்று அங்கேயே முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட வேண்டிய தலையாய கடமையைச் செய்ய தமிழக முதலமைச்சர் தவறிவிட்டார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழக அரசு 1000 கோடி ரூபாய் நிவாரணம் என்று அறிவித்துள்ளது. 16,500 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டிருக்கிறார். அழிந்து போன தென்னை மரங்கள், வாழைத் தோப்புகள், கரும்புத் தோட்டங்கள், முருங்கை மரங்கள், மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்கள், வெற்றிலை மற்றும் தோட்டப் பயிர்கள் புயலில் அழிந்துபோன வீடுகள், மீனவர்களின் படகுகள், அனைத்துக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனில் 25 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். மத்திய அரசு இதில் 10 சதவீதம் கூட கொடுக்காது என்பது என்னுடைய ஊகமாகும்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நரேந்திர மோடி அரசு தொடக்கத்திலிருந்தே ஓரவஞ்சகமாகச் செயல்பட்டு வருகிறது. காவிரி டெல்டா சோழ வளநாட்டை பாலைவனமாக்கி விட்டால் கார்ப்பரேட் கம்பெனிகள் வேளாண் நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி மீத்தேன் எரிவாயு, பாறைப்படிம எரிவாயு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்து இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு முனைந்து விட்டது எனக் குற்றம் சாட்டுகிறேன். அதனால்தான், காவிரிக்கு வரும் தண்ணீரைத் தடுக்க கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டும் வேலை தொடங்க இருக்கிறது. மத்திய அரசு மறைமுகமாக பச்சைக்கொடி காட்டி விட்டது. தமிழகத்தின் எதிர்காலம் அபாயகரமாகத் தெரிகிறது.

நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்சார ஊழியர்களை நான் நேரில் பார்த்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குறிப்பாக உட்பகுதிகளில் உள்ள கிராம மக்கள், வீடுகள் இழந்து உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி, சிகிச்சைக்கு மருந்தின்றி, வெளிச்சத்திற்கு மின்சாரம் இன்றி பெரும் துன்பம் பட்டதால் நியாயமான ஆத்திரம் அடைந்துள்ளனர். அதனால் தங்கள் கோபத்தைக் காட்டுகிறார்கள்.

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்திருந்ததாலும், மின்சாரம் இல்லாததாலும் அரசு அதிகாரிகள் அந்த இடங்களுக்குப் போய் சேர முடியவில்லை. பொதுமக்கள் கோபத்தின் காரணமாக தற்போது உள்ளே பணிசெய்ய வருகிற அதிகாரிகளையும் தடுப்பது வருந்தத் தக்கதாகும். அதிலும் நிவாரணப் பொருள்கள் வரும் வாகனங்களை வழிமறித்து வன்முறையில் பறித்துச் செல்வது மனிதாபிமானமற்ற செயலாகும்.

கேரள மாநிலத்திற்கு நான் சென்றிருந்தேன். ஆளும் மார்க்சிÞட் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இணைந்து நிவாரணம் வழங்கியதையும், பொது மக்கள் வரிசைகளில் நின்று பொருள்களைப் பெற்றதும் என் மனதை ஈர்த்தது.

தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் நாசகார கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு என்னுடைய தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவும் கழகப் பொருளாளர் கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில் ஒரு ஆய்வுக்குழுவும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 25, 26, 27 தேதிகளில் எனது தலைமையிலான குழு புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும், கணேசமூர்த்தி அவர்கள் தலைமையிலான குழு திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கும் ஆய்வு நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

என்னுடைய தலைமையிலான குழு உறுப்பினர்கள் :

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் டாக்டர் க. சந்திரசேகரன்

தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ. உதயகுமார்

மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா

நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் இராஜேந்திரன்

தொண்டர் அணிச் செயலாளர் பாÞகர சேதுபதி,

ஆபத்துதவிகள் செயலாளர் முனியசாமி,

இணைச் செயலாளர் கலையரசன்,

குமரி மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளர் சுமேஷ்,

மருத்துவர் ரகுராமன்,

புதுக்கோட்டை மருத்துவர் சின்னப்பா

 

கணேசமூர்த்தி தலைமையிலான குழு உறுப்பினர்கள் :

திருவாரூர் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன்

நாகை மாவட்டச் செயலாளர் மோகன்,

மருத்துவர் சதன் திருமலைக்குமார்,

விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன்,

ஈரோடு மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா. முருகன்,

மாநில மாணவர் அணிச் செயலாளர் பால. சசிகுமார்.

இளைஞர் அணித் துணைச் செயலாளர் மார்க்கோனி,

வழக்கறிஞர் அணித் துணைச் செயலாளர் சத்தியகுமரன்

மருத்துவர் வெங்கடேசன்,

வழக்கறிஞர் பாசறை பாபு

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டையில் டாக்டர் ரொஹையா தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நாகை மாவட்டத்திலும் பிற பகுதிகளிலும் இதுவரை 15 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 25 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்க இருக்கிறோம்.

இந்த இரண்டு குழுக்களும் ஆய்வு செய்யாத பிற மாவட்டங்களில் குறிப்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஆய்வுக்குழுக்களை அமைத்து ஆய்வு செய்து அறிக்கைகளை அனுப்புவார்கள். அனைத்து ஆய்வுகளையும் சரிபார்த்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பப்படும்.                  

எனத் தெரிவித்துள்ளார்

Related Posts