கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.மேலும் கடைகளை அகற்றுவதற்கான கால வரம்பையும் நிர்ணயித்திருந்தது.   இதை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குமார் மற்றும் வியாபாரிகள் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்தஉச்சநீதிமன்றம்  கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, கோவில்களில் உள்ள கடைக்காரர்கள் கருத்து கூறும் வாய்ப்பை ஏன் அவர்களுக்கு தமிழக அரசு வழங்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து அறநிலையத்துறை சட்டம் 1959-ன் அடிப்படையில் கோவில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,  அந்த நடைமுறைகளின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க கடை உரிமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்

Related Posts