கட்டிடத் தொழிலாளியை படுகொலை செய்த 6 பேர் கொண்டகும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு

நெல்லையில் கட்டிடத் தொழிலாளியை படுகொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நெல்லை கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணிகன்டன். கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று இரவு தனது நண்பர் மதனுடன் இசக்கியம்மன் கோவில் திடலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், மணிகண்டன் மற்றும் மதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த மதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன் கூறியுள்ளார். 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மணிகண்டன் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான ஆயத்தப் பணிகளை போலீஸார் மேற்கொண்டனர். ஆனால் சம்பவ இடத்திலிருந்து உடலை மீட்க எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், கொலையாளிகளை பிடித்தால்தான் உடலை எடுக்க விடுவோம் எனக் கூறினர். உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மணிகன்டன் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மக்கள் சம்மதித்தனர்.

Related Posts