கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை : ஜூன்-24

கவியரசு கண்ணதாசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள கவியரசு கண்ணதாசனின் சிலைக்கு, அவரது குடும்பத்தினர் சார்பில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குமரி அனந்தனும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் கண்ணதாசன் சிலையின் கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் உள்ளது என்று கூறினார்.

இதேபோல், கவியரசு கண்ணதாசன் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. வாசன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை மதிக்காமல் செயல்படுவது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.

Related Posts