கனமழை காரணமாக மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன

கனமழை காரணமாக மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. முக்கியச் சாலைகளும், ரயில்வே வழித்தடங்களும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை : ஜூன்-26

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் மேற்குவங்கத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இடிமின்னல் தாக்கி 5 பேரும், நீரில் மூழ்கி ஒருவரும் என கனமழைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். கொல்கத்தாவின் மகாத்மா காந்தி சாலை, சையத் அமீர் அலி அவென்யூ உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் தண்ணீரில் மூழ்கிக் காணப்படுவதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பாந்த்ரா, அந்தேரி, சயான், செம்பூர் ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும், கார்களும் மழைநீரில் தத்தளிக்கின்றன. கனமழைக்கு ஒரே நாளில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Posts