கபினி அணையிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு வந்தது

Want create site? Find Free WordPress Themes and plugins.

கர்நாடகாவில் கபினி அணையிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர், மேட்டூரை வந்தடைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 616 கனஅடியில் இருந்து 847 கனஅடியாக அதிகரித்துள்ளது.

 சேலம் : ஜூன்-17

 கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணி, குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி மற்றும் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழையின் காரணமாக கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் பாதுகாப்புக் கருதி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 35ஆயிரம் அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் 28ஆயிரம் கன அடி வீதம், காவிரி நீர் இன்று அதிகாலை 2 மணிக்கு, பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் ஒகேனக்கல் அருவிகளில் காவிரி நீர் கொட்டியது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் அதிகளவில் வருவதால் தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 616 கனஅடியில் இருந்து 847 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 40 அடியாகவும், நீர்இருப்பு 12 புள்ளி 8 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணை விரைவில் நிரம்பும் பட்சத்தில் அதில் இருந்து கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்படும் என்பதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts