கபினி அணையிலிருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கபினி அணையிலிருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. 

கர்நாடகா : ஜூன்-25

கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், காவிரியில் நீர் திறப்பும் 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் இருந்தது. அங்கு மழை அளவு குறைந்ததால், கபினிக்கு நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 440 கனஅடியாக உள்ளது. அதேசமயம், அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 84 அடியில் 81 அடியாக உள்ளது. இருப்பினும் கபினியில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு நீர்திறப்பதை கர்நாடகம் நிறுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 250 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு காவிரியில் நீர்வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்த அளவு 10 ஆயிரத்து 200 கனஅடியாகக் குறைந்துள்ளது. 3-வது நாளாக பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணையை பொறுத்தவரையில், நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரத்து 428 கனஅடியில் இருந்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 13 ஆயிரத்து 694 கனஅடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.71 அடியாகவும், அணையின் நீர்இருப்பு 20.90 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Posts