கருணாசுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாசுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும், சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதிவு செய்தனர்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இன்று காலை கருணாஸ் கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்னர் அவரைஎழும்பூரில் உள்ள 13வது நீதிபதி கோபிநாத் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாஸ் உடன் கைது செய்யப்பட்ட நெடுமாறன், கார்த்திக், செல்வநாயம் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர். கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்த நீதிபதி கோபிநாத், அவரை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, கருணாஸ் உள்ளிட்ட 4பேரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் கருணாஸ் உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்ப்பட்டனர்.

கைதானபோது செய்தியாளர்களிடம்  பேசிய கருணாஸ், ‘ சட்டமன்ற உறுப்பினரான தன்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை என்றார். இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய தன் மீது குற்றப்பிரிவு 307 கீழ் கொலை முயற்சி வழக்கு ஏன் பதிவு செய்யப்பட்டது  என தெரியவில்லை என்ற கருணாஸ், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் ஆளும் அதிமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

Related Posts