கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?

கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெருமளவு இருக்கிறது என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை என கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும கேவலமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும், பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கைது செய்யப்படவில்லை  என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதி மன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை கைது செய்ய அதிமுக அரசு தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என அவர் வினவியுள்ளார்.  கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அ.தி.மு.க அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிய “கூவத்தூர் மர்மமும் ரகசியமும்” வெளிச்சத்துக்கு வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே கருணாசை கைது செய்திருக்கிறார்கள் என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.! எனவே, கைது செய்ய வேண்டியவர்களை, அவர்களுடைய பின்னணிப் பற்றி கவலைப்படாமல், கைது செய்ய வேண்டும் எனவும், விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Posts