கருணாநிதி விரைவில் குணமடைவார்: நேரில் விசாரித்தபின் குலாம் நபி ஆசாத் பேட்டி

 

 

கருணாநிதி குணமடைந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் சிறுநீரக நோய்த்தொற்று காரணமான கடந்த இரண்டு நாட்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று அதிகாலை சென்னை காவேரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.    அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக ரத்த அழுத்தம் சீராகியுள்ளது.இருப்பினும் அவரது உடல்நிலை 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை  தெரிவித்த நிலையில், இன்று தலைவர்கள் பலர் அவரது நலம் குறித்து விசாரித்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு சென்று அங்கு இருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர் ஒருவர் ஆளுநருக்கு விளக்கி கூறினார்.

இதையடுத்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்,தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக்,தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூறியதன் அடிப்படையில் நானும் முகுல் வாஸ்னிக்கும் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று காலையில் சென்னை வந்தோம். கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை சந்தித்தோம். அவர் உடல்நிலை சீராக இருக்கிறது என்பதை அறிந்து திருப்தியடைகிறோம், மகிழ்ச்சியடைகிறோம். அவர் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

கருணாநிதி சில நாட்களில் வீடு திரும்புவார் என நம்புகிறேன். மருத்துவக் குழுவிடம் நீண்ட நேரம் உரையாடினோம். கருணாநிதியை நேரடியாகப் பார்க்கவில்லை. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் மருத்துவர்கள் தவிர்த்து யாரும் பார்க்க முடியாது. தகுதியான, சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளிக்கின்றனர். அவர் முழு குணமடைவார் என்பதை மருத்துவர்கள் விரைவில் உறுதிப்படுத்துவர்என குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

Related Posts