கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருதரப்பு மோதல்: புதுச்சேரியில் பதற்றம்

 

 

புதுச்சேரியில் தனியார் மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை உயர்த்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், பொதுமக்களுக்கும் அந்நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் ஸ்ட்ரைட்ஸ் சாசன் எனும் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 4,800 டன் மருந்து உற்பத்தி செய்கின்றது. இந்நிலையில், ஆண்டு உற்பத்தியை 9,156 டன்னாக உயர்த்துவது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

 புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தன. இந்நிலையில், இன்று கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். தனியார் நிறுவனம் தரப்பில் மருந்து உற்பத்தியை பெருக்குவதற்கு ஆதரவாக அதிகாரிகள்வந்திருந்தனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தை நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஊடகங்களை தாக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் துர்ஷாவத் கூட்டத்தை ஒத்திவைத்துக் கிளம்பினார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் வரும்போது பொதுமக்கள் அவரது காரினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

சிறிது நேரம் கழித்து பொதுமக்கள் மீண்டும் இருதரப்பினரும் கிழக்கு கடற்கரை சாலையில் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். மேலும், 10-க்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதாகவும், நிறுவனத்தின் கழிவு நீர் கடலில் கலப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நிறுவனத்திலிருந்து புகை வருவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

Related Posts