கர்நாடகத்தில் நீதி வென்றதாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

கர்நாடகத்தில் பெரும்பான்மையின்றி ஆட்சியமைக்க முயற்சித்த பாஜகவின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் நீதி வென்றதாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா : மே-19

கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டு பேரவையில் இருந்து  எடியூரப்பா வெளியேறினார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஒற்றுமையோடு எதிர்க்கட்சியினர் பாஜகவை வீழ்த்தியது பெருமையாக உள்ளது என்றும்  குழப்பத்தை ஏற்படுத்திய கர்நாடக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கர்நாடகத்தில் பாஜகவின் பணபலத்தை ஜனநாயகத்தால் முறியடித்து விட்டோம் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் , காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறினார்.

ஜனநாயகம் வெற்றி பெற்றதற்காக கர்நாடக மக்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தால், ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரசுக்கு நம்பிக்கையில்லை தெரிவித்தார்.

Related Posts