கர்நாடக அணைகளை வந்து பாருங்க.. : ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

 

 

கர்நாடக அணைகளைப் பார்வையிட வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர், புதிதாக பதவியேற்க உள்ள கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு பகிர்ந்து அளிப்பது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என ரஜினி கூறி இருந்தது பற்றி குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குமாரசாமி, கர்நாடக அணைகளை பார்க்க வருமாறு ரஜினிக்கு நான் அழைப்பு விடுகிறேன். அங்கிருக்கும் அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையை வந்து பார்க்கட்டும்.  இங்கு போதுமான தண்ணீர் இல்லை. அவர் இங்கு நேரில் வந்து பார்த்தால் நிலையை புரிந்து கொள்வார்கள் என்றார்.

அணைகளைப் பார்வையிட்ட பின்னும் தண்ணீர் திறந்துவிட ரஜினி கோரினால் அதுபற்றி விவாதிக்கத் தயார் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார்.

முன்னதாக, நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் அப்போது கேட்டுக்கொண்டார். 

Related Posts