கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவு

 

 

கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் 223 தொகுதிகளில்  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ்,மதச்சார் பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது. கடந்த 2 மாதமாக கர்நாடகாவில் நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியது. பா.ஜ.க.-காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளைமாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளனர். நாளை மறுநாள் வாக்காளர்களுக்கு சிலிப் வழங்கும் பணி நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும், ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12-ந்தேதி  காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதன் பிறகு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 15-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Posts