கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆணை

கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா நேற்று முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க  வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் முடிவை எதிர்த்து, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதேபோல், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், கர்நாடக பாஜக சார்பில் முகுல் ரோத்தகி, காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜரானார்கள். விசாரணையின்போது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, சட்டசபையில் பெரும்பான்மை நிரூபித்து, ஆட்சியை தக்கவைப்பேன் என்று கூறினார்.

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கே,ஜி.போபையா நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக நாளை காலை 11 மணி சட்டசபையை கூட்டவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts