கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என கருத்துக்கணிப்பில் தகவல்

 

 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், இரண்டு இடங்களைத் தவிர மீதமுள்ள 222 சட்டசபைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில், காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. இந்தியா டுடே, டைம்ஸ் நவ், சுவர்னா நியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், காங்கிரஸ் 100 இடங்களுக்கு கூடுதலாக பிடிக்கும் என தெரிவித்துள்ளது. நியூஸ் எக்ஸ், என்டிடிவி, ரிபப்ளிக் டிவி, சி-வோட்டர் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி 100 இடங்களுக்கு கூடுதலாக பெறும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து கருத்து கணிப்புகளிலும், எந்த கட்சியும், பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்களை பிடிக்காது என்பது தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் சரியானதாக அமைந்தால், கர்நாடக மாநிலத்தில், தொங்கு சட்டசபை அமையும் என தெரிகிறது. இத்தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Posts