கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நாளை(25.05.18) நம்பிக்கை வாக்கெடுப்பு

 

 

கர்நாடக மாநில  முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமி  அரசு மீது, சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. பாஜகவின் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடிவெடுத்தது. பெங்களூருவில் நடைபெற்ற விழாவில், கர்நாடகத்தின் 24-வது முதலமைச்சராக மதச்சார்பள்ள ஜனதா தள தலைவர் குமாரசாமி பதவி ஏற்றார். அவருடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். பதவி ஏற்றவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். குமாரசாமி தலைமையிலான அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்ற பிறகு மற்ற அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்காக வெள்ளிக்கிழமை அன்று கூடும் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

சட்டசபையில் காங்கிரசுக்கு 78 உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 38 உறுப்பினர்களும் உள்ளதால் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெறுவது உறுதி என துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறியுள்ளார்.  இந்நிலையில் வாக்கெடுப்பை பா.ஜ.க புறக்கணிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

Related Posts