கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு: ஏராளமான சலுகைகள் அறிவிப்பு

 

 

கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி முதலமைச்சர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டார். அந்த அறிக்கையில், பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், தாலிக்கு தங்கம், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, பெங்களூரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், தேசிய, கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி  செய்யப்படும் எனவும்,  நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள், ஏழைபெண்கள் திருமணத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 3 கிராம் தங்கம் வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும், குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கும் அன்னபூர்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு சதவீத வட்டியில் 2 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பசுவதைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Posts