கர்நாடக மாநிலத்தில் 222 சட்டசபைத் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கர்நாடக மாநிலத்தில் 222 சட்டசபைத் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கர்நாடகா : மே-12

கர்நாடக சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைவைதால். சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், ஜெயநகர் தொகுதி பா.ஜ.வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகள் குவியல் குவியலாக கைப்பற்றப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 222 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்கை பதிவு செய்தனர்.

முதலமைச்சர் சித்தராமையா தனது சொந்த ஊரான சித்தரமனாண்டி கிராமத்தில் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களின் கடந்த கால நல்ல பல திட்டங்களை பார்த்து மக்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் பாஜக அலை வீசுகிறது என்றும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார். 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று தெரிவித்த எடியூரப்பா, காங்கிரசை மக்கள் வெளியேற்றும் தருணம் வந்து விட்டது என்றார்.

ஹசன் மாவட்டம் ஹோலிநரசிபுரா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவ கவுடா, இந்த தேர்தலில் கிங்காக இருப்போம் என்றும்  கிங் மேக்கராக இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.

இந்த தேர்தலில் மொத்தம் 4 கோடியே 96 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தலையொட்டி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினர் உள்பட ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts