கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகத்தில், பல்வேறு குழப்பங்கள் மற்றும் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவை சேர்ந்த எடியூரப்பா, முதலமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தமது அரசு வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா : மே-17

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவில், 104 இடங்களை  வென்ற பாஜக, ஆட்சியமைக்க அனைத்து பணிகளை தீவிரமாக மேற்கொண்டது. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை தங்கள் அணிக்கு இழுக்கும் வேலைகளில் ஈடுபட்டது. இதையடுத்து, நேற்றிரவு ஆட்சியமைக்க வருமாறு பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில்,  உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் வழக்கு தொடரப்பட்டது. விடியவிடிய விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என்று  உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை சரியாக 9 மணிக்கு பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. பெரும்பான்மையை நிரூபித்த பின் அமைச்சரவை பதவியேற்கும் என்று கூறப்படுகிறது. விழாவில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவுடேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, தலைமைச் செயலகம் வந்து தனது பணியைத் தொடங்கிய எடியூரப்பா, முதல் கையெழுத்தாக 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ஓரிரு நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளதாகவும், அதில் தமது அரசு வெற்றி பெறும் என்று கூறினார்.

Related Posts