கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  

கர்நாடகா : ஜூன்-30

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் 2-ந் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Posts